ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த கிர்சாய் கிராமத்தில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், கிராமத்தின் அருகே உள்ள கிர்மா ஆற்றின் கரையோரத்தில் அச்சிறுமி சடலமாகக் கிடந்ததைக் கண்டறிந்து மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரும் சிறுமியும் பழகி வந்ததும், சிறுமி மீது கொண்ட சந்தேகத்தின் காரணமாக ஆற்றுப்பகுதிக்கு வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சித் தகவலும் வெளியானது.
கொலைக்குப் பின்னர் உடலை ஆற்று மணலில் புதைக்க முயன்ற அந்த இளைஞர், முயற்சி தோல்வியடைந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணையின் அடிப்படையில் குற்றத்தை உறுதி செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
