அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியொன்றில், வகுப்பறையிலேயே ஆறு வயது சிறுமி மீது அதே பள்ளியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் விரைந்து செயல்பட்டு சிறுமியை மீட்டனர். படுகாயமடைந்த அக்குழந்தையை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, வகுப்பறைக்குள் சிறுமியை அந்தச் சிறுவன் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கவலையையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
