தெலுங்கானா மாநிலம், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள தம்மைகுடா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அபிஷேக். கமரெட்டி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவனை, இரவு நேரத்தில் அதே விடுதியைச் சேர்ந்த சக மாணவர்கள் சுமார் 12 பேர் சேர்ந்து ஈவுஇரக்கமின்றி கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் மாணவன் அபிஷேக்கின் முகம் மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி நிர்வாகம், அவர் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகப் பெற்றோரிடம் திசைதிருப்பும் விதமாகப் பொய் கூறியுள்ளது. பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெற்றோரிடம், சக மாணவர்கள் தன்னைத் தாக்கிய உண்மையை அபிஷேக் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவர்கள் எதற்காக இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்ற உண்மையான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
