செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு பயின்று வந்த தோழிகளான தைலாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி மற்றும் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த அலிஷா நிலோபர் ஆகிய இருவரும், மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று இவர்களின் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலிஷா நிலோபரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம் மாணவிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
