ஈரான் – ஓமன் நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கக் கடற்படை முழுமையாக முடக்கத் திட்டமிட்டுள்ளது. டிரம்ப் அரசின் இந்த அதிரடி முடிவானது உலக வர்த்தகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் பாதுகாப்பு நிபுணருமான ராபர்ட் ஏ. பேப் (Robert A. Pape) உலக நாடுகளுக்கு ஒரு மிகமுக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். 30 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளை ஆய்வு செய்துள்ள அவர், இந்த முறை ஏற்படப்போவது வெறும் விலை உயர்வு மட்டுமல்ல, மாறாக உலகளாவிய “பொருட்கள் பற்றாக்குறை” (Supply Shock) என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ராபர்ட் பேப்பின் கூற்றுப்படி, உலகப் பொருளாதாரம் தற்போது மூன்று நிலைகளில் இரண்டாவது நிலையை எட்டியுள்ளது. முதல் நிலையில் பொருட்களின் விலை உயரும்; இரண்டாம் நிலையில் பொருட்களின் இருப்பு குறையத் தொடங்கும்; மூன்றாம் நிலையில் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பும் சீர்குலையும். நாம் தற்போது இரண்டாவது நிலையில் இருப்பதால், இன்னும் 10 நாட்களுக்குள் எரிபொருள், உரம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு உலகச் சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார். விலை உயர்வைக் கூட வரிச் சலுகைகள் மூலம் சமாளிக்க முடியும், ஆனால் பொருட்கள் விநியோகமே நின்றுவிட்டால் பணம் இருந்தும் பயனில்லாத சூழல் உருவாகும் என்று அவர் எச்சரிக்கிறார்.
1973-ஆம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், தற்போதைய சூழல் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அன்று 7 சதவீத விநியோகப் பாதிப்பிற்கே உலகம் திணறிய நிலையில், இன்று உலக எண்ணெய் உற்பத்தியில் 20 சதவீதம் கடந்து செல்லும் ஹார்முஸ் பாதை முடக்கப்படுவது ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை முதலில் முடக்கும். அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியில் சுயசார்பு கொண்டிருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) பாதிக்கப்படும்போது பணவீக்கம் அதிகரித்து அமெரிக்காவும் இந்த நெருக்கடியில் சிக்க நேரிடும் என சிகாகோ திட்டத்தின் (CPOST) தலைவரான பேப் விளக்குகிறார்.
இறுதியாக, சந்தை அறிக்கைகளையோ அல்லது பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களையோ நம்புவதை விட, ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை மட்டும் உன்னிப்பாகக் கவனிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். கப்பல் போக்குவரத்து சீராகவில்லை என்றால், அமெரிக்காவின் 10 ஆண்டு கால பத்திர லாப விகிதம் 8 சதவீதத்தை எட்டும் அல்லது டாலரின் மதிப்பு சரிந்து அமெரிக்காவே பணம் அச்சிடும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே, ஹார்முஸ் முடக்கம் என்பது வெறும் ஒரு பிராந்தியப் போர் பதற்றம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உலகத் தொழிற்துறையையும் முடக்கும் ஒரு பொருளாதார ‘ஷாக்வேவ்’ என்று பேராசிரியர் ராபர்ட் பேப் எச்சரித்துள்ளார்.
