தஞ்சை நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் தற்பொழுது பெரும் சர்ச்சையையும், கட்சித் தொண்டர்களிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக சட்டப்பேரவையை தவெக தலைவர் விஜய்யிடம் ஒப்படைப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளதுடன், தஞ்சை தவெக நிர்வாகியான விஜய் சரவணனை ‘மாண்புமிகு அமைச்சர்’ எனக் குறிப்பிட்டு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இன்னும் சட்டமன்றத் தேர்தலே எதிர்கொள்ளாத நிலையில், கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்பாகவே, தன்னிச்சையாக இவ்வாறு ‘அமைச்சர்’ எனப் பெயர் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், “தலைமை அறிவிக்கும் முன்பே இதுபோன்று செய்யலாமா?” என சொந்தக் கட்சித் தொண்டர்களே சமூக வலைத்தளங்களிலும் போஸ்டர் ஒட்டிய இடங்களிலும் கேள்வி எழுப்பி வருவதால், தஞ்சை அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் தற்பொழுது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
