நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பல தடைகளைக் கடந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள அவரது ஒவ்வொரு நகர்வுகளையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அமரும் நாற்காலிகளில் வெள்ளை நிறத் துண்டு போர்த்தப்பட்டிருக்கும் வழக்கமான நடைமுறை முதலமைச்சர் விஜய்யின் இருக்கையிலும் தொடர்ந்ததை சமூக வலைத்தளங்களில் மக்கள் கவனித்து வந்தனர்.
அரசு அலுவலக நாற்காலிகளில் வெள்ளை துண்டு போடும் இந்த வழக்கம் ஆங்கிலேயர் காலத்து அடிமைமுறை மற்றும் விஐபி கலாச்சாரத்தின் அடையாளம் என்றும், இதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்கும் முதலமைச்சர் விஜய், இந்தச் சிறுமியின் பதிவை உன்னிப்பாகக் கவனித்து, ஒரு நொடி கூட தாமதிக்காமல் தனது நாற்காலியில் இருந்த வெள்ளை துண்டை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
சிறுமி ஒருவரின் ஒற்றைப் பதிவிற்காக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த ஒரு விஐபி கலாச்சார நடைமுறையை முதலமைச்சர் விஜய் சட்டென்று மாற்றிய விதம் தற்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் மக்களின் குரலுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தையும், எளியோரின் வேண்டுகோளையும் மதிக்கும் அவரது இந்தச் செயலையும் கண்டு தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் நெகிழ்ச்சியடைந்து சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
