பொதுவாக பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் .தீபாவளிக்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புத்தாடை அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை சமயத்தில் ஒரு நாளைக்கு முன்பு அல்லது பின்பு தேவைக்கேற்ப அரசு விடுமுறை விட்டு வருகிறது. அதற்கு பதிலாக அந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு ஈடு செய்யப்படுகிறது. எனவே இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்போதே கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே தீபாவளிக்கு முன்பே இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். பண்டிகையையும் சொந்த ஊரில் சென்று கொண்டாடிவிட்டு வருவதற்கு நல்ல சூழல் ஏற்படும். கடந்த வருடமும் இது போல தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முன்கூட்டியே அறிவித்தால் ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
