“ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?”…. “1963 முதல் 2017 வரை”….. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய அதிர்ச்சிகள்…. ஆளுங்கட்சியை வீழ்த்திய பரபரப்பு வரலாறு….!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள் என அனைத்தும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவர்கள் எளிதாக வெற்றியைப் பறித்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்தப் பொதுவான கருத்தைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பதிவு செய்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளதை அறியலாம்.

வரலாற்றின் தொடக்கப்புள்ளியாக 1963-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தலைக் குறிப்பிடலாம். அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும், ஆளுங்கட்சியை எதிர்த்துக் களம் கண்ட திமுக வேட்பாளர் பி.யு. சண்முகம் அபார வெற்றி பெற்று அந்தத் தொகுதியைக் கைப்பற்றினார். இது ஆளுங்கட்சிக்கு விழுந்த முதல் பெரிய அரசியல் அடியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 1974-இல் கோயம்புத்தூர் மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி, எம்.ஜி.ஆரால் புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அபார வெற்றி பெற்றது. இதில் ஆளுங்கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

   

அதேபோல், 1999-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நத்தம் மற்றும் திருவட்டார் இடைத்தேர்தல்களில் முறையே அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் சவால் விடுத்தனர். மேலும், சமீபத்திய வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அமைந்தது. அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக தனது முழு பலத்தையும் பிரயோகித்த நிலையிலும், சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியைத் தோற்கடித்த ஒரு சுயேச்சை என்ற புதிய வரலாற்றைப் படைத்தார்.

   

தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கூட்டணிக் கட்சிகளின் தனித்துப் போட்டி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலமான நகர்வுகள் ஆகிய சவால்களுக்கு மத்தியில், ஆளுங்கட்சி எச்சரிக்கையுடன் செயல்படத் தவறினால் கடந்த கால வரலாறுகள் மீண்டும் திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை அரசியல் சூழல் தெளிவாக உணர்த்துகிறது.