“இரவு விருந்து துப்பாக்கிச்சூடு… டிரம்ப்பை வறுத்தெடுக்கும் ஈரான்!… ‘லெகோ’ பொம்மைகளை வைத்து தரமான கிண்டல்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ”…!!!

By Muthu Mani on சித்திரை 27, 2026

Spread the love

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு முயற்சி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருந்து டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இந்தச் சம்பவம் ஒரு “திட்டமிடப்பட்ட நாடகம்” என்று ஈரான் ஆதரவு குழு ஒன்று வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது. ஈரானின் இந்த அனிமேஷன் வீடியோ, டிரம்ப்பின் வீழ்ச்சி அடைந்து வரும் செல்வாக்கை மறைக்கவே இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகச் சித்தரிக்கிறது.

தற்போது அமெரிக்காவில் டிரம்ப்பின் பல்வேறு முடிவுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக ஈரான் மீதான போர் பதற்றம், பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான ஆவணங்கள் வெளியான விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான அடக்குமுறைகள் போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தக் கருத்துக்கணிப்புகள் டிரம்ப்புக்கு இருக்கும் ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளதைக் காட்டுவதால், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் தாக்குதல் முயற்சி நாடகம் ஆடப்பட்டதாக ஈரான் தரப்பு வாதிடுகிறது.

   

‘எக்ஸ்புளோசிவ் மீடியா’ என்ற ஈரான் ஆதரவு குழு வெளியிட்டுள்ள இந்த அனிமேஷன் வீடியோ, குழந்தைக விளையாடும் ‘லெகோ’ (Lego) பொம்மைகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டிரம்ப் மேடையில் பேசுவது போன்றும், துப்பாக்கிச் சூடு நடந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது போன்றும் காட்சிகள் உள்ளன. பின்னணியில் ஒலிக்கும் ராப் பாடல், “ஒவ்வொரு முறை செல்வாக்கு குறையும் போதும், பழைய நாடகத்தையே அரங்கேற்றுகிறீர்கள்” என்று டிரம்ப்பின் ஈகோவையும், அவரது அரசியல் உத்திகளையும் எள்ளி நகையாடும் வகையில் அமைந்துள்ளது.

   

இதற்கு முன்பும் வன்முறையைத் தூண்டும் வகையிலான வீடியோக்களை வெளியிட்டதற்காக இந்தக் குழுவின் பதிவுகளை யூடியூப் தளம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய 31 வயது இளைஞரான ஆலன் என்பவரை “கிறிஸ்தவ எதிரி மற்றும் மனநோயாளி” என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் கொந்தளிப்பிற்கு இடையே, ஈரானின் இந்த கிண்டலான வீடியோ சர்வதேச ராஜதந்திர ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.