மாமியார் குடும்பத்திற்கு செக் வைத்த ஹைகோர்ட்… ரிதன்யா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்…!

By Swetha on ஐப்பசி 6, 2026

Spread the love

சென்னை வரதட்சணை கொடுமை வழக்கில், தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் இளம்பெண் ரிதன்யாவின் நகைகளை குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து மீட்டு, அவரது தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கில் அவினாசி டி.எஸ்.பி ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவினாசி டி.எஸ்.பி வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும், எஸ்.பி அந்தஸ்து அதிகாரியை புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், குரல் பதிவு, மின்னணு ஆதாரங்களை ஆராயாமல் மெத்தனமாக செயல்பட்டதாகவும், வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் நகை மற்றும் 63 லட்ச ரூபாய் மதிப்பிலான காரை மீட்டுத் தரக் கோரிய மனுவை கீழ் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்தும் மேல்முறையீடு செய்திருந்தார்.

   

வழக்கை விசாரித்த நீதிபதி, தற்கொலைக்கு முன் ரிதன்யா அனுப்பிய ஆடியோ பதிவில் நகைகள் எங்கு உள்ளன என்று தெளிவாகக் கூறியிருந்தும் காவல்துறை அவற்றை மீட்காததைச் சுட்டிக்காட்டினார். இதனால் நகைகளை மீட்டு தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, அதேவேளையில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற ரிதன்யாவின் தந்தையின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவை நிறைவு செய்தார்.