டெல்லியில் உள்ள மௌஜ்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு குழந்தைகள் காப்பகத்தில், மூன்று வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த பெற்றோர், காப்பகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல் துறையினர், காப்பகத்தின் இயக்குனர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்; மேலும் பராமரிப்பாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
காப்பகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளில், சிறுவனை ஆசிரியர்களும் பராமரிப்பாளர்களும் கடுமையாக தாக்கும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிறுவனை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து, எட்டி உதைத்தும், கன்னத்தில் அறைந்தும் அவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். காப்பகத்தில் இருந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு வாந்தி மற்றும் கண்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். இருப்பினும், இந்த கொடூர சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் எந்த பொறுப்பையும் ஏற்க மறுத்ததோடு, சிறுவனின் மீதுதான் தவறு என்று கூறியதாக அவனது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலால் அந்த மூன்று வயது சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான். தினமும் தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதே அழுதுகொண்டே இருக்கும் அந்த சிறுவன், ஏதேனும் சிறிய தவறு செய்தால் எங்கே தன் பெற்றோரும் அடித்து விடுவார்களோ என்ற உச்சக்கட்ட அச்சத்தில் வாழ்ந்து வருகிறான். அவனது காதுப் பகுதிகளில் இன்னும் வீக்கம் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்கான இயந்திரங்களின் சத்தத்தைக் கேட்டு அவன் பயப்படுவதால் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை கூட எடுக்க முடியவில்லை என்றும் அவனது தந்தை கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
