தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
இயக்குனர் பாலா தன்னுடைய படங்களை முடிப்பதற்கு மிக நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வார். இதனால் அவர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் ஹீரோக்கள் கடைசி கட்டத்தில் பின் வாங்கி பின்னர் வேறொருவர் கதாநாயகன் ஆவது வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.

#image_title
பாலா முதலில் இயக்கிய சேது படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் முரளி. பின்னர் அவர் விலகி அவருக்குப் பதில் விக்ரம் வந்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய நந்தா படத்திலும் சூர்யா நடிப்பதற்கு முன்னர் அஜித்தான் நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜித் ஒப்பந்தமாகி அதற்காக தாடி, நீண்ட தலைமுடி வளர்த்து வந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் அவர் விலக ஆர்யா நடித்தார்.
அவர் இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் சூர்யா, கார்த்தியை முதலில் நடிக்க வைக்க நினைத்தார். பின்னர் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் பேசப்பட்டனர். ஆனால் கடைசியில் ஆர்யாவும் விஷாலும் நடித்தனர். இதே போல அவர் இயக்கத்தில் இப்போது உருவாகி வரும் வணங்கான் படத்தில் கூட முதலில் சூர்யா நடித்து, பின்னர் அவர் விலகி அருண் விஜய் நடித்து வருகிறார்.
