வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையே, வரும் அக்டோபர் 23-ம்தேதி தென்கிழக்கு அரபிக்கடலிலும், அக்டோபர் 26-ம்தேதி தென்கிழக்கு வங்கக்கடலிலும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலத்தில் அடுத்தடுத்து உருவாகும் இந்த வானிலை மாற்றங்களால் கடலோர மற்றும் மலையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
