கொய்யாப்பழம் குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கி, உடலுக்குப் பல நன்மைகளைத் தரும் ஒரு சிறந்த பழமாகும். இதில் வைட்டமின் சி, ஏ, பி6, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக, கொய்யாவில் ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுப்பதுடன், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளையும் குறைக்கப் பயன்படுகிறது.
மேலும், இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுவதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இதன் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களைப் பாதுகாத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் பெருமளவில் உதவுகின்றன.
