மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையின் களம்போலி பகுதியில் நள்ளிரவில் காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஸ்விஃப்ட் டிசையர் காரை நிறுத்துமாறு கான்ஸ்டபிள் திலீப் போய் சிக்னல் செய்துள்ளார்.
ஆனால், காரை நிறுத்தாத ஓட்டுநர், காவலர் திலீப் போய் மீது மோதியதில் அவர் காரின் போனட் மீது விழுந்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் காரை அதிவேகமாக இயக்கி, காவலரை போனட்டிலேயே வைத்து சுமார் 200 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த காவலர் திலீப் போய் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அந்த காரில் பொருத்தப்பட்டிருந்தது போலி நம்பர் பிளேட் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், களம்போலி காவல்துறையினர் தப்பியோடிய இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
