இன்றைய சூழலில் குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் வைஃபை மற்றும் இலவச ஓடிடி சேவைகள் கிடைப்பதால், பெரும்பாலான மக்கள் கேபிள் டி.வி மற்றும் டி.டி.எச். சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். டிராய் அமைப்பின் புதிய கட்டண விதிகளால் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மக்கள் பிராட்பேண்ட் மற்றும் ஓடிடி சேவைகளுக்கு வேகமாக மாறி வருகின்றனர். இதனால் கேபிள் மற்றும் டி.டி.எச். தொழில்கள் மிக வேகமாக சரிவைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட வரைவு அறிக்கையை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வேகமாகப் பரவியது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் 4 முதல் 6 மடங்கு வரை உயர்த்தப்பட உள்ளதாகவும், இதனால் 11 கோடி டி.வி. இணைப்புகள் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ‘தொலைத்தொடர்பு விதிகள் 2026’ வரைவு அறிக்கையில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்தப் பிரிவும் இடம்பெறவில்லை என்றும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவு அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் ஜூலை 27-ஆம் தேதி வரை தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
