தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக, 2027ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்களை மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு பெறத் தொடங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் மூலம் இந்த விண்ணப்பச் செயல்முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்யேக செயலி வழியாகவோ எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.
ஹஜ் 2027 பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 22.06.2026 முதல் 20.07.2026 (இரவு 11.59 மணி வரை) இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https//hajcommittee.gov.in வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது “HAJ SUVIDHA” என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்தும் பூர்த்தி செய்யலாம். இந்த விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்பதுடன், விண்ணப்பதாரர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய ஹஜ் குழுவின் மூலம் இப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்ற முக்கிய விதியும் நடைமுறையில் உள்ளது.
விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதியை உறுதி செய்து, பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் பிரதிகளை (புகைப்படங்கள் அல்ல) சரியாகப் பதிவேற்ற வேண்டும்:
- விண்ணப்ப இறுதி நாளுக்கு முன் பெறப்பட்டு, குறைந்தது 31.12.2027 வரை செல்லுபடியாகக்கூடிய இந்தியக் கடவுச்சீட்டின் (Passport) முன் மற்றும் பின் பக்கங்கள். (புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயரை காலியாக விடாமல் பூர்த்தி செய்வது கட்டாயம்).
- வெள்ளை நிறப் பின்னணியுடன் கூடிய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (480 x 640 px, JPG/JPEG வடிவில், 5-20 KBக்குள்).
- வங்கிப் புத்தகத்தின் (Passbook) நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை.
- கடந்த ஆண்டைப் போலவே, பயணிகள் தங்களின் விருப்ப வரிசைப்படி இரண்டு புறப்பாட்டு தளங்களைத் (Embarkation Points) தேர்வு செய்யும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகள், தங்களின் முதல் தவணைத் தொகையாக ரூ. 1,52,300/- செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். மேலும், ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 20.07.2026 ஆகும். மரணம் அல்லது கடுமையான மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களின் முழுமையான உடல் மற்றும் நிதித் தயார்நிலையைச் சிந்தித்து, உறுதியான முடிவோடு விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
