தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை இருந்த நிலையில் தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும் விஜய்க்கு எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதேசமயம் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சட்டரீதியாக விஜய் இதை கையாண்டு வருகின்றார். இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுக காய் நகர்த்தி வருவதாகவும் சில செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களும் அவ்வாறுதான் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மக்களை மடைமாற்றம் செய்யவே கச்சத்தீவு விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதை திசை திருப்ப வேண்டாம். திமுக அரசின் தோல்வியே கரூர் சம்பவத்திற்கு காரணம். அதிலும் குறிப்பாக கரூரில் உயிரிழந்த விவகாரம் அறிந்ததும் திமுக அமைச்சர்கள் சென்று நடித்தது இருக்கே, சிவாஜியே தோத்துப் போயிருவாரு. அந்த மாதிரி அன்பில் மகேஷ் நடித்தார். என்ன நாடகம் ஆடுறாங்க. முழுமையாக தோற்றுப் போன 41 பேர் படுகொலைக்கு காரணமான ஒரு மாநில அரசு மக்களை திசை திருப்புவதற்காக சொல்லி இருக்கிறது என்று எச். ராஜா பேசியுள்ளார்.
