தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து நான்கு மாதங்களை எட்டியுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக தமிழக அரசியல் களத்தை ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற தவெகவின் சாதனை, இந்திய அரசியலிலேயே ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், தவெகவின் 100 நாள் சாதனைகளை விளக்கி அக்கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் நடைபெற்ற தவெகவின் சாதனைக் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தவெகவின் இந்த எழுச்சியை ஜோதிடக் குறியீடுகளுடன் ஒப்பிட்டுப் பேசியது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திரைத்துறையிலிருந்து வந்தவர் என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலளித்த அவர், “நம் தலைவர் திரைத்துறையில் உச்சம்தொட்டது போல, தற்போது தமிழக மக்களின் நிரந்தர முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். இந்த 100 நாட்கள் மட்டுமன்றி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் தவெகவின் தொலைநோக்குத் திட்டங்களை நேசிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தற்போது “சனி திசை” நடப்பதாகவும், முதலமைச்சர் விஜய்க்கு “குரு திசை” நடப்பதாகவும் கூறினார். “சனி திசை நடப்பவர்களால் சட்டமன்றத்தில் அமைதியாக உட்காரக்கூட முடியவில்லை; அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள நினைத்தவர்கள் இன்று அருகருகே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சபாநாயகரிடம் நேரம் கேட்டு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் குரு திசை நடக்கும் நம் தலைவரை யாராலும் வீழ்த்த முடியாது” என அவர் ஆவேசமாகப் பேசினார்.
சட்டமன்றத்தில் கடந்த 45 ஆண்டுகால அனுபவம் கொண்ட செங்கோட்டையன், “தமிழக வரலாற்றிலேயே ‘கோட்’ அணிந்து கம்பீரமாக வரும் ஒரே முதலமைச்சர் இவர் மட்டுமே” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மக்களுக்காகவே தான் அரியணையில் அமர்ந்திருப்பதாகக் கூறும் முதலமைச்சர், விரைவில் மாநிலம் முழுவதும் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்கவுள்ளதாகக் கூறினார். 50 ஆண்டுகால இரு துருவ அரசியலை மாற்றி அமைத்து, புதிய அரசியல் கலாச்சாரத்தை தவெக தமிழகத்தில் நிலைநிறுத்தியுள்ளதாக அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
