ஆங்கிலம் தெரியலனா அடிப்பியா?…. 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த அநியாயம்… பாடம் புகட்டிய எம்.டி…. ஆக்ரா தாஜ் ஹோட்டலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 28, 2026

Spread the love

ஆக்ராவில் இயங்கி வரும் பிரபல ‘தாஜ்’ ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தெரியாததால் ஏற்பட்ட தொடர்பு இடைவெளி காரணமாக, உணவக வெயிட்டராகப் பணிபுரியும் காந்தி என்பவரை வாடிக்கையாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார். ஆக்ரா அருகிலுள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த காந்தி, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவுப் பணி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தால், இந்த அநீதியைக் குறித்து யாரிடமும் கூறாமல் அமைதி காத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் அறிந்த ஹோட்டலின் மேலாண் இயக்குநர் பரிதோஷ் லதானி, ஊழியரின் தன்மானத்திற்கு ஏற்பட்ட இழுக்கைக் கண்டு கொதித்தெழுந்தார். உடனடியாக அந்த வாடிக்கையாளருக்குத் தாஜ் ஹோட்டல் கிளைகள் அனைத்திலும் வாழ்நாள் முழுவதும் நுழையத் தடை (Lifetime Ban) விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். பண பலமும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக எளிய ஊழியர்களின் சுயமரியாதையைச் சீண்டுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதில் நிர்வாகம் உறுதியாக நின்றது.

   

இது குறித்துத் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பரிதோஷ் லதானி, “ஊழியர்கள் தங்களுக்காகப் பேசப் பயந்து தயங்கி நிற்கும் வேளையில், அவர்களுக்கு ஆதரவாக முன்னின்று குரல் கொடுப்பதே உண்மையான நிர்வாகத்தின் கடமையாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். எளிய ஊழியரின் தற்காப்பிற்கும் தன்மானத்திற்கும் முன்னுரிமை அளித்த ஹோட்டல் நிர்வாகத்தின் இந்த நேர்மையான நடவடிக்கைக்குப் பல தரப்பிலிருந்தும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.