“14 மணி நேர இருள், வீட்டுக்குள் புகுந்த சாக்கடை நீர்”…. முதல்வரின் சொந்த தொகுதியிலேயே தொடரும் நரகம்… அதிகாரிகளின் மெத்தனத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்….!

By Nanthini on ஐப்பசி 19, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அப்பகுதியின் பல்வேறு தெருக்களில் முழங்காலுக்கும் மேல் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல பகுதிகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, குடிநீரேற்ற மோட்டார்கள் இயங்காததால் குடிநீருக்காகவும் மக்கள் சிரமப்பட நேர்ந்தது.

முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியாகவும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியாகவும் பெரம்பூர் உள்ள நிலையில், அங்கு எந்தவிதமான முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதே இப்பகுதியில் தண்ணீர் வடிவதற்குத் தடையாக உள்ளதாக உள்ளூர்வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

   

மழை நின்று பல மணி நேரம் கடந்தும் அதிகாரிகள் யாரும் களத்திற்கு வராதது பொதுமக்களிடையே பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறாததுடன், அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றத் தவறிய தவெக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

   

எனவே, முதல்வர் உடனடியாக தனது சொந்தத் தொகுதியில் நேரில் ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன் மின்சார விநியோகத்தை உடனே சீரமைக்க வேண்டும். மேலும், கிடப்பில் போடப்பட்டுள்ள வடிகால் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்காவிட்டால், வரும் காலங்களில் இப்பகுதி மேலும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.