மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலுள்ள மஹுவாகேடா கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அனிருத் லோதி, கடந்த மே 8-ம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கிராமம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில், சிறுவனின் வீட்டிற்கு அருகிலிருந்த குப்பைக் குவியலுக்குள் இருந்து அவனது உடல் மீட்கப்பட்டது.
இந்த கொடூரக் கொலை குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுவனின் பெரியம்மா (தந்தையின் அண்ணி) ராஜகுமாரி லோதி என்பவரே கொலையாளி என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனது கணவருக்கும் சிறுவனின் தந்தைக்கும் இடையே நிலவிய சொத்துத் தகராறு மற்றும் குடும்பப் பகை காரணமாக, பழிவாங்கும் நோக்கில் சிறுவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
உலகமே அன்னையர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தாய்க்கு நிகரான பெரியம்மாவே நிலத்துக்காக 3 வயதுப் பிஞ்சைக் கொலை செய்து குப்பையில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ராஜகுமாரி லோதி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அனிருத்தின் இழப்பால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
