ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே கடந்த 2 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து ஈரோடு முழுவதையும் உலுக்கியுள்ளது. சமையல் ஆர்டர் வேலை செய்து வரும் அச்சிறுவனின் பெற்றோர்கள், வேலை காரணமாக லக்காபுரத்தில் உள்ள தாய் வழி பாட்டி வீட்டில் சிறுவனை விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பாட்டி வீட்டிற்கு செல்ல மறுத்து சிறுவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளான். சந்தேகமடைந்த தாய் தட்டிக் கேட்டபோது, தான் 6-ஆம் வகுப்பு படித்தது முதல் கடந்த 2 வருடங்களாகப் பாட்டி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூரத்தை அழுதுகொண்டே சிறுவன் உடைத்துள்ளான்.
மகன் கூறிய அதிர்ச்சி தகவலைக் கேட்டு ஆடிப்போன தாய், உடனடியாகத் தனது தாயார் வீட்டிக்குச் சென்று சண்டையிட்டதுடன், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலிஸார், 12 வயது பேரனுக்குப் பாலியல் தொல்லை அளித்த பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். சொந்தப் பேரனுக்கே பாட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
