கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59). இவர் இன்று தனது வீட்டின் வராண்டாவில் அமைதியாக அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு காட்டுப்பன்றி, அவர் அமர்ந்திருந்த நாற்காலியை உடைத்துக் கொண்டு அவரை பலமாகத் தாக்கியது.
அந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த அப்துல் காதருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரைத் தாக்கிய அதிவேகத்திலேயே அந்தப் பன்றி அங்கிருந்து தப்பியோடியது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் முழு காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது.
அண்மைக்காலமாகவே கேரளா மற்றும் கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் மீது இதுபோன்று தொடர்ந்து நடத்தப்படும் காட்டுப்பன்றித் தாக்குதல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
