தமிழக சட்டமன்றத்தில் ‘ட்விஸ்ட்’ மேல் ட்விஸ்ட்… ஆளுநர் அர்லேகர் செய்த ‘அந்த’ காரியம்… வாயடைத்துப் போன திமுக… ஆடிப்போன தமிழக அரசியல்…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஜூன் 18, 2026 அன்று நடந்த நிகழ்வுகள், சாதாரணமாகக் கடந்து போகக்கூடியவை அல்ல. வழக்கமாகத் தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கினாலே அதிரடிகளுக்கும், அரசியல் போர்க்களங்களுக்கும் பஞ்சம் இருக்காது. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்தார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையிலேயே தீர்மானம் கொண்டு வர, ஆளுநர் ரவி பாதியிலேயே அவையை விட்டு விறுவிறுவென்று வெளிநடப்பு செய்தார். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த மோதல் போக்கு, டெல்லியையே உலுக்கியது.

ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது அரசியல் விமர்சகர்களை வாயடைக்க வைத்துள்ளது. தற்போதைய ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சட்டமன்றத்திற்கு வந்து, அரசு தயாரித்துக் கொடுத்த கொள்கை விளக்க உரையை ஒரு வரி, ஒரு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே முழுமையாக வாசித்து முடித்துள்ளார். வியப்பான விஷயம் என்னவென்றால், அந்த உரையில் மத்திய அரசை விமர்சிக்கும் வார்த்தைகளும், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான வரிகளும் இருந்தன. இருந்தும், ஆளுநர் எதையும் தவிர்க்காமல் அப்படியே வாசித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

   

மறுபுறம், இந்த இணக்கமான சூழலை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில், “கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் எங்களுடைய அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படித்ததே இல்லை. ஆனால் இன்று, மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இருந்தும் ஒரு வரி மாற்றாமல் ஆளுநர் வாசித்துள்ளார் என்றால், இதிலிருந்தே தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள ‘ரகசிய கனெக்‌ஷன்’ வெட்டவெளிச்சமாகியுள்ளது” என்று அனல் பறக்கக் குற்றம் சாட்டியுள்ளார்.

   

அனைவரையும் விடப் பெரிய ஆச்சரியம் தேசிய கீதம் இசைக்கப்பட்டதில் நடந்துள்ளது. கடந்த காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வது வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்று, சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் என இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. இதனைப் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டிய ஆளுநர் அர்லேகர், “3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநர் உரை எவ்வித இடையூறும் இன்றி முழுமையாக வாசிக்கப்பட்டுள்ளது ஒரு ‘புதிய உதயம்’. இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டிய ஒரு சரித்திர நிகழ்வு” என உருகியிருக்கிறார். அன்று மோதல், இன்று இணக்கம் என மாறியுள்ள இந்த ‘புதிய உதயம்’ தற்காலிகமானதா அல்லது தேர்தல் கணக்குகளுக்கான அஸ்திவாரமா என்பதை வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.