அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போச்சு… MLA பதவியும் போச்சு, அமைச்சர் கனவும் கலைந்தது… வேலுமணி டீமுக்கு செக் வைத்த ஆளுநர்…!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

தமிழகத்தில் விஜய் தலைமையில் அமைந்துள்ள மைனாரிட்டி அரசில், தற்போது முதலமைச்சருடன் சேர்த்து 10 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இந்த அரசைத் தக்கவைத்துக் கொள்ளவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த ஆதரவின் அடிப்படையில் தங்களுக்கு 12 அமைச்சர் பதவிகள் வேண்டும் என வேலுமணி தரப்பு கோரிய நிலையில், 7 இடங்களை ஒதுக்க முதலமைச்சர் விஜய் சம்மதித்திருந்தார்.

இருப்பினும், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்த 25 எம்.எல்.ஏ-க்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ஆளுநர் அர்லேகரிடம் மனு அளித்துள்ளனர். சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருப்பதால் வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்க ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

   

ஆளுநரின் இந்த அதிரடி முடிவால் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் கடும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் தங்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் கனவும் கலைந்து, எம்.எல்.ஏ பதவியும் பறிபோனால் கடந்த காலங்களில் 18 எம்.எல்.ஏ-க்களுக்கு நேர்ந்த கதி தங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் எழுந்துள்ளது. இதனால், வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவ இரகசியமாகத் தூது அனுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இன்று திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தின் போது மொத்தம் 20 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வேலுமணி அணியினரைச் சேர்க்க ஆளுநர் மறுத்துவிட்டதால், தவெக மற்றும் அமைச்சரவையில் சேர விருப்பம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே நாளை அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவு செய்துள்ள போதிலும், தற்போதைய சூழலைச் சமாளிக்க விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளைத் தங்களது அமைச்சரவை கூட்டணியில் இணைக்க தவெக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.