தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும் 9 சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் உடலளவிலும் துன்புறுத்தி வந்துள்ளனர். வகுப்பறைக்குள் மாணவனை நிர்வாணப்படுத்தி, ரப்பர் பேண்ட் மற்றும் ஸ்கேலால் அடித்தும், மிளகாய் பொடி தூவியும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இக்கொடூரச் செயலை வெளியில் சொன்னால் மேலும் தாக்குவோம் என மிரட்டியதால், பாதிக்கப்பட்ட மாணவன் பயத்தில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
மாணவனுக்குத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதைக் கண்டு சந்தேகமடைந்த ஆசிரியர் ஒருவர், மாணவனின் தாயாரிடம் தகவலைத் தெரிவித்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த தாயார், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். ஆனால், தலைமை ஆசிரியரோ இச்சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவனுக்கு உடல்நிலை சரியாகும் வரை விடுப்பு எடுக்குமாறும் கூறிச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியரின் அலட்சியப் போக்கால் மனவேதனையடைந்த தாய், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த ஓராண்டாக அம்மாணவன் இக்கொடுமைகளுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிஎன்எஸ் மற்றும் போக்சோ ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட 9 மாணவர்களையும் கைது செய்து திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தீவிர விசாரணை மேற்கோள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் குழந்தைகள் நலக்குழு மூலம் உடனடியாக ஆலோசனை (Counseling) வழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் மூடிமறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
