தமிழ்நாட்டில் இருந்து துபாய்க்கு அரசு பஸ்ஸா?… அதுவும் வெறும் ரூ.10,000 தான் டிக்கெட் விலை… சோஷியல் மீடியாவை உலுக்கிய அரசு பஸ் டிக்கெட்…!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸ் பகுதியில் இருந்து பி. தாமோதரன் என்ற பயணி தனது நண்பருடன் ஓசூர் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியதாகவும், அப்போது நடத்துனர் வழங்கிய டிக்கெட்டில் ‘பவானி பைபாஸ் முதல் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் (UAE)’ என அச்சிடப்பட்டு, கட்டணமாக ரூ.10,000 குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. துபாய்க்கு பஸ்சில் போக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் எனப் பலரும் இந்த செய்தியை உண்மை என்று நம்பி பகிர்ந்து வந்தனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் மண்டல அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக மற்றொரு தகவலும் பரவியது. அதாவது, டிக்கெட் வழங்கும் மின்னணு கருவியில் (ETM) ஏற்பட்ட மென்பொருள் கோளாறு (Software glitch) காரணமாகவே இந்த தவறு நேர்ந்தது என்றும், பயணியிடம் வழக்கமான கட்டணமான ரூ.150 மட்டுமே வசூலிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியதாக ஒரு செய்தி தீயாய் பரவியது. இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

   

இந்நிலையில், இந்த பவானி டு துபாய் டிக்கெட் விவகாரம் குறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Team) அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்து, பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசுப் பேருந்தில் துபாய்க்கு டிக்கெட் வழங்கப்பட்டதாகப் பரவிய செய்தியும், அதற்கு அதிகாரிகள் மென்பொருள் கோளாறு என்று விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்ட செய்தியும் முற்றிலும் பொய்யானது மற்றும் வதந்தி என்று அரசுத் தரப்பில் அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தின்படி, சமூக வலைதளங்களில் வைரலான அந்த குறிப்பிட்ட டிக்கெட் (எண்: 27846), ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல், கடந்த 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை பயணிப்பதற்காக ரூ.100 கட்டணத்தில் உண்மையாக வழங்கப்பட்டதாகும். யாரோ சில மர்ம நபர்கள், அந்த அசல் பயணச்சீட்டை தொழில்நுட்ப முறையில் எடிட் செய்து (Morph), ‘பவானி – கோயம்புத்தூர்’ என்ற விவரத்தை ‘பவானி – துபாய்’ என்றும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 என்றும் போலியாகத் திருத்தி வதந்தியைப் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் இத்தகைய போலியான மற்றும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதனைப் பகிர வேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.