தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன். பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன்.
தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் இயக்கிய திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றளவும் வணிக சினிமாவின் உச்சமாக இருப்பது கரகாட்டகாரன் திரைப்படம்தான். அந்த படத்தை அப்போதைய காலகட்டத்திலேயே ஒரு கோடி பேர் திரையரங்கில் சென்று பார்த்ததாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் ரிலீஸால் ராமராஜன் ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக கொண்டாடப்பட்டார். அவரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில் கரகாட்டக் காரன் படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இப்போது ஒரு நேர்காணலில் ராமராஜன் பகிர்ந்துள்ளார்.
அதில் “முதலில் இந்த படத்தில் கவுண்டமணி அண்ணன் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர் நடித்த தவில் வித்வான் கதாபாத்திரத்தில் எஸ் எஸ் சந்திரனைதான் நடிக்க பேசி இருந்தார்கள். அவர் வேறு கட்சி, நான் வேறு கட்சி. அதனால் சரிவராது என்று நான் சொல்லிவிட்டேன். ஆனாலும் அவரை நடிக்க வைப்பதில் எல்லோரும் குறியாக இருந்தார்கள். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்தில் கவுண்டமணி அண்ணன் நடித்தால்தான் நான் நடிப்பேன் என உறுதியாக சொல்லிவிட்டேன். அதன் பின்னர்தான் கவுண்டமணி படத்துக்குள் வந்தார்” எனக் கூறியுள்ளார் ராமராஜன்.
ராமராஜனின் கணிப்பு மிகச்சரியானது. ஏனென்றால் அந்த படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி செந்தில் கூட்டணியின் நகைச்சுவை காட்சிகளும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தன. குறிப்பாக இருவரும் இணைந்து நடித்த வாழைப்பழ காமெடி இன்றளவும் கொண்டாடப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
