தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் அவரின் தனித்துவ நடிப்பை கோடிட்டு காட்டின. அதன் பின்னர் அவரின் மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்றது. செந்திலும் அவர் கூட்டணி அமைத்து உருவாக்கிய லாரல் ஹார்டி வகைக் காமெடி அழியாப் புகழை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.
கவுண்டமணி எல்லா வகையிலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானர். ஊடகங்களை வெகு அரிதாகதான் சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். யாராவது பேட்டிக்காக நச்சரித்தால் “தம்பி இங்க பாரு… என்னோட வேல நடிக்குறது… உன்னோட வேல படத்த பாக்குறது. அதோட முடிச்சுக்குவோம்.. இந்த பேட்டி எல்லாம் தேவையில்லாதது…” என நாசூக்காக மறுத்துவிடுவாராம்.
கவுண்டமணி எப்படி படத்தில் சக நடிகர்களைக் கலாய்த்து கவுண்டர் கொடுக்கிறாரா அதே போலதான் நிஜ வாழ்க்கையிலும் எதையும் ஓப்பனாக பேசிவிடுவார். இதை சிலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், சில நேரங்களில் கவுண்டமணியின் வார்த்தை துடுக்கால் பலர் மனம் புண்பட்டு அவரிடம் இருந்து விலகியதும் உண்டு.
அப்படி ஒரு சம்பவம் கமல்ஹாசனுக்கும் கவுண்டமணிக்கும் இடையிலேயே நடந்துள்ளது. சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு இணைந்து கவுண்டமணி நடித்துள்ளார். அப்போது அவரிடம் யாரோ ‘இந்த படத்தில் செந்தில் உங்கக் கூட நடிக்கலையா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி தன் ஸ்டைலில் “இந்த படத்தில் என்கூட வெள்ளை செந்தில் (கமல்ஹாசனைக் குறிப்பிட்டு) நடிச்சு இருக்காரு” என சொல்லிவிட்டாராம். இந்த தகவல் கமல்ஹாசன் காதுகளுக்கு செல்லவே, அவர் கோபத்தில் சில ஆண்டுகள் கவுண்டமணியிடம் பேசாமலேயே இருந்தாராம். அதன் பின்னர் இருவரும் இந்தியன் படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.