தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் சூழலில், இப்போது தங்கம் வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், சமீபத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து 18 கேரட் தங்கம் மீண்டும் ரூ. 11,000-ஐக் கடந்திருந்தாலும், இந்த விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்படும்போது தங்கத்தின் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பங்குச்சந்தையில் பிரபல நகைக் கடைகளின் பங்குகள் சரிவைக் கண்டு வருவதால், அவசரப்பட்டு அவற்றில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம் என அவர் எச்சரிக்கிறார். தமிழ்நாட்டை இலக்காகக் கொண்டு ரூ. 300 கோடி முதலீட்டில் ‘அட்சய தங்க மாளிகை’ என்ற புதிய பிராண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ள மற்றொரு பிரபல நிறுவனத்திற்கு, இங்குள்ள பெரிய நகைக் கடைகளின் ஆதிக்கத்தால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைப்பது கடினம் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்தியாவில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை அதிகரித்து, நடுத்தர மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் மிக அவசியமான தேவை உள்ளவர்கள் மட்டுமே தற்போது தங்கம் வாங்குகின்றனர். இதன் காரணமாகத் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை கணிசமாகக் குறைந்து, அதன் மொத்த சந்தை அளவு சுமார் 6% வரை சுருங்கியுள்ளதாக ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
