உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள்… குடிசைக்குள் மரக்கட்டையில் தொங்கும் குளுக்கோஸ் பாட்டில்கள்… ம.பி-யில் அம்பலமான கொடூரம்…!!

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள பகேலி கிராமத்தில், ஒரு சிறிய குடிசைக்குள் ‘நிகிலேஸ்வர் மருத்துவமனை’ என்ற பெயரில் போலி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வரும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புற மக்களின் தேவையைப் பயன்படுத்தி, சி.பி. சிங் நாகர் மற்றும் அவரது மகன் புபேந்திர சிங் நாகர் ஆகிய இருவரும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக அங்கீகாரம் இன்றி இந்த மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையின் அவல நிலை அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. அங்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் பாட்டில்களை மாட்டுவதற்கு முறையான ஸ்டாண்டுகள் கூட இல்லை; அதற்குப் பதிலாக குடிசையின் கூரையைத் தாங்கி நிற்கும் மரக் கட்டைகளில் கயிறுகளால் குளுக்கோஸ் பாட்டில்கள் கட்டப்பட்டு நோயாளிகளுக்கு ஏற்றப்படுகின்றன. மேலும், எந்தவித சுகாதாரமும் இல்லாமல் தரையில் விரிக்கப்பட்ட படுக்கைகளில் நோயாளிகள் படுத்துக் கிடக்க, தூசிகள் நிறைந்த அசுத்தமான சூழலில் அலோபதி மருந்துகள் மற்றும் ஊசிகள் மூட்டைகளாகக் கொட்டி வைக்கப்பட்டு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

   

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ் சிங் தாக்கூர், முறையான அங்கீகாரமின்றி இது போன்ற குடிசைகளில் மருத்துவமனை நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த போலி மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.