பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், கலால் துறை காவலர் தேர்வில் முறைகேடு செய்ய முயன்ற அதிநவீன தொழில்நுட்ப மோசடி கும்பலை காவல்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட போலீஸார், தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே தீவிர சோதனை நடத்தி இந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புளூடூத் கருவிகள், மைக்ரோ இயர்போன்கள் , நவீன மின்னணு சாதனங்கள் மற்றும் பல மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள் மூலம் தேர்வு மையத்திற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வெளியில் இருந்து கொண்டு விடைகளைக் கூற இந்த கும்பல் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்வில் முறைகேடு செய்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல விண்ணப்பதாரர்களிடம் இந்த கும்பல் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும், அவர்களுடன் கைகோர்த்த விண்ணப்பதாரர்களையும் கண்டறிய காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
