தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தற்போது தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த ஆலோசனையின் போது, வரவிருக்கும் தேர்தலில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் நீடித்த தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும், அந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. இந்த முறை கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் ஜி.கே.வாசன் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக – தமாகா இடையிலான இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை, கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கிய அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.
