அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், 38 வயதான டஸ்டின் நால்ஸ் என்ற நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலியான 34 வயது ஷென்டிங் குவோ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2024-ல் நடந்த இச்சம்பவத்தில், நால்ஸை கத்தியால் குத்தியும் அவரது உடலைச் சிதைத்தும் கொலை செய்ததாக குவோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், நால்ஸ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்தக் கொடூரக் கொலைக்கு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கர்ப்பம் குறித்த வாக்குவாதமே முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அக்குழந்தைக்கு நால்ஸ் தான் தந்தை எனவும் குவோ கூறியபோது, அதனை ஏற்க நால்ஸ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குவோ, அவரது காலில் கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின் நால்ஸ் மயக்கமடைந்தது போல் நடித்தாரா என்பதைச் சோதிப்பதற்காக, குவோ அவரது ஆணுறுப்பைத் துண்டித்துக் குப்பைத் தொட்டியில் வீசியதுடன், வெளியே சென்று சில மருந்துகளை வாங்கி வந்து அவருக்கு முதலுதவி செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான செயலும் அரங்கேறியுள்ளது.
குவோவின் இந்த முதலுதவி முயற்சிகள் பலனளிக்காத நிலையில் நால்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மேசா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவோ மீது, கவனக்குறைவாக மரணத்தை ஏற்படுத்துதல், சடலத்தை அவமதித்தல், கொடூரக் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன் காதலனைக் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், கடும் கோபத்தின் உச்சத்திலேயே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மனநலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
