விசாகப்பட்டினம் கஞ்சரப்பாலத்தை சேர்ந்த பொலிசெட்டி சுரேஷ் குமார் (30) என்பவரை, பெண்ணைக் கொன்று சடலத்தை சூட்கேஸில் அடைத்து ராயகடா மாவட்டத்தில் வீசிய குற்றத்திற்காக ஒடிசா காவல்துறை ஜூலை 30 அன்று கைது செய்தது. சந்நியா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த சுரேஷ், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், சடலத்தை நீல நிற சூட்கேஸில் அடைத்து, ரயிலில் விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவிற்கு எடுத்துச் சென்று வீசிவிட்டு அன்றே ஊர் திரும்பியுள்ளார்.
கடந்த ஜூன் 17 அன்று ராயகடா காளிகுடாவில் உள்ள ஒரு ஷோரூம் அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸை காவல்துறை கைப்பற்றியபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் அடையாளம் தெரியாத பெண்ணின் அழுகிய சடலம் இருந்தது. சமூக வலைதளங்கள் மூலம் முயன்றும் உடலை யாரும் அடையாளம் காணாததால், காவல்துறை டி.என்.ஏ சாம்பிள்களை சேகரித்துவிட்டு இறுதிச்சடங்குகளைச் செய்தது.
https://twitter.com/HateDetectors/status/2083166614930034937/video/2
அதன்பின் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் செல்லின் உதவியுடன் குற்றவாளியின் தடங்களை ஆந்திராவிலிருந்து ராயகடா வரை பின்தொடர்ந்து சுரேஷைக் கைது செய்தது. விசாரணையில் சுரேஷ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது இது தொடர்பாக மேலும் தடயவியல் பரிசோதனைகளும் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகின்றன.
