மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் பள்ளி முடிந்து அண்ணனுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி, குடும்பத்திற்குத் தெரிந்த நபரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவத்தில், 21 வயதான அந்த குற்றவாளி, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இருவரையும் நம்ப வைத்துள்ளான். பின்னர், அவர்களை ஒரு பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற அவன், 11 வயது சிறுவனின் கண்முன்னேயே அவனது தங்கையை சீரழித்ததோடு, தடுக்க முயன்ற சிறுவனையும் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளான்.
மயக்க நிலையில் கிடந்த தங்கையை விட்டுவிட்டு சிறுவன் தனது வீட்டிற்கு ஓடிச் சென்று நடந்த கொடூரத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளான். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மெஹ்கான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உடனடியாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த அந்த குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, நர்சிங்பூர் மாவட்டம் கோட்டேகான் பகுதியில் ஆறு நாட்களுக்கு முன்பு நடந்த மற்றொரு கொடூரச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய 28 வயதான அனு யாதவ் என்ற பக்கத்து வீட்டுக்காரர், சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கழுத்து நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கிலும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு ஒரே நாளில் குற்றவாளியைக் கைது செய்திருந்தாலும், நாடு முழுவதும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரக் குற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
