ஆந்திரப் பிரதேசத்தில் 12 நாட்களாகக் காணாமல் போன 3 வயது சிறுமி ஜாஹ்னவியின் மர்மம் இன்னும் விலகாமல் நீடித்து வருகிறது. காக்கிநாடா மாவட்டத்தின் துனி மண்டலப் பகுதியில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த பாமாயில் தோட்டப் பகுதியில் இச்சிறுமி மாயமாகியுள்ளார். சிறுமியைத் தேடும் பணியில் போலீஸ், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டை நடைபெறும் தோட்டத்தின் வேலிப் பகுதியில் இரண்டு பொம்மைகள் மர்மமான முறையில் தொங்கவிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்கள் இதனை ஏதேனும் மாந்தீரிகச் செயல் என்று நினைத்த நிலையில், போலீஸ் தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. காட்டில் ஏதேனும் அனகோண்டா பாம்புகளோ அல்லது காட்டு விலங்குகளோ இருந்தால் அவற்றை ஈர்ப்பதற்காக, கோழி இறைச்சியைப் பொம்மைகளுக்குள் வைத்து ‘க்ரைம் சீன் ரீக்ரியேஷன்’ முறையில் போலீசாரே அவற்றை அங்கு கட்டியுள்ளனர்.
இந்தத் தேடுதல் பணியில் அதிநவீன தெர்மல் ட்ரோன்கள், ஜிபிஎஸ் டிராக்கிங் மற்றும் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் நள்ளிரவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது விலங்குகள் ஏதேனும் தாக்கியதா என்ற கோணத்தில் விசாரணை நீடிக்கிறது. இதற்கிடையே தேடுதலில் உதவிக் கொண்டிருந்த மோப்ப நாய் ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.
