பிறந்தநாள் கேக்கில் மயக்க மருந்தா?…. செஞ்சி சிறுமி வழக்கில் தூக்கியடிக்கப்பட்ட மாப்பிள்ளை தம்பி…. வெளிவந்த திடுக்கிடும் ‘கேக்’ மர்மம்….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றைய இரவே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் திடீரென மாயமானார். உள்ளூர் காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து 15 நாட்களாகத் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிரமடைந்துள்ளது.

சிபிசிஐடி டிஎஸ்பிகள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைத் தற்காலிக விசாரணை மையமாக மாற்றி, கடந்த 5 நாட்களாக கிராமத்திலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாய் பவானியிடம் பல மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது சிறுமியின் பாட்டி சாந்தியிடமும் அன்றைய இரவு நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாகக் கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

   

இந்த வழக்கில் ஒரு முக்கியத் திருப்பமாக, சிறுமியின் மூத்த சகோதரிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினேஷ் என்பவரின் குடும்பத்தினரிடம் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தினேஷின் தாய் அஞ்சலா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகிய இருவரையும் விசாரணை மையத்திற்கு வரவழைத்து சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

குறிப்பாக, சிறுமி மாயமான அக்டோபர் 11-ஆம் தேதியன்று, சிறுமிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி வந்து கொடுத்தவர் தினேஷின் தம்பி கார்த்தி என்பது தெரியவந்துள்ளது. கேக் கொடுக்க வந்தபோது வீட்டில் என்ன பேசப்பட்டது, அவர் எவ்வளவு நேரம் அங்கு தங்கியிருந்தார், வேறு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நடந்தனவா என்ற பல்வேறு கோணங்களில் கார்த்தியிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும், ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பழைய குற்றவாளிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் பட்டியலைத் தயாரித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டாரா, குடும்பப் பகை காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனப் பல கோணங்களில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.