தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கும், சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்று முடிந்த பிறகு, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றி கத்தி மற்றும் வாள்களால் பயங்கர மோதல் வெடித்தது. இந்தத் தாக்குதலில் மாரியப்பனின் மகனும், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவருமான இசக்கிராஜா (20) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர்த் தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலரும் படுகாயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, மாணவர் இசக்கிராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் மீண்டும் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தீவிர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
