ஜெம் வீரமணி விவகாரம்…. ரூ. 70 கோடி டீல் புகாரும் திமுகவின் ரூ. 1 கோடி வழக்கும்….. உயர்நீதிமன்ற கதவை தட்டிய ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்…!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு விவகாரத்தில், திமுக அரசு மற்றும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாகக்கூறி தொடரப்பட்ட ரூ.1.01 கோடி மான நஷ்ட வழக்கை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்குக் கல்வி உதவி வழங்குவதாகக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மற்றும் அவரது உதவியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தனது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறாமல் இருக்க, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொத்தை விற்று அரசியல் பிரமுகர்களுக்கும் காவல் துறையினருக்கும் ₹70 கோடி வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜெம் வீரமணி முதலமைச்சருக்கு நண்பர் என்றும், முந்தைய திமுக ஆட்சியிலேயே புகார் வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

இந்தச் குற்றச்சாட்டுகளால் கட்சிக்கு அவதூறு ஏற்பட்டதாகக் கூறி, திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “புகார் வந்த அடுத்த நாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மூலம் எவ்விதத் தலையீடும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவதூறு கருத்துகளைப் பரப்பியதற்காக ₹1.01 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

   

நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், “பொறுப்பில் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர முன்அறிவிப்பு (நோட்டீஸ்) அளித்திருக்க வேண்டும்” எனத் பிரதிவாதிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அவர்கள் தனிநபர்களாகவே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக ₹1 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர திமுகவுக்குப் பச்சைக்கொடி காட்டி உத்தரவிட்டது.

   

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்அறிவிப்பு வழங்கப்படாமல் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், முதன்மை வழக்கை எண்களிட்டு முறைப்படுத்தக் கூடாது எனப் பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு அக்டோபர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை மான நஷ்ட ஈட்டு வழக்கை எண்ணிடுமாறு வற்புறுத்த மாட்டோம் என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.