மின்னலே படத்தில் அவர் கூடதான் வேலை செய்யணும்னு ஆசைப்பட்டேன்… ஹாரிஸ் வந்தது எப்படி?- கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

By vinoth on தை 21, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்குப் பிறகு உயர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் ஸ்டைலிஷாக படமாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌதம் மேனன். அவர் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.

அதன் பின்னர் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றன. தன்னுடைய சில ஹிட் படங்களை அவர் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தார்.

   

இவர் படங்களில் இளைஞர்களைக் கவரும் அம்சமாக அமைந்தவை அழகான பாடல்கள். இவரும் ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து பணியாற்றிய பல படங்களின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.அந்த படங்களில் பெரும்பாலான பாடல்களை பாடலாசிரியர் தாமரை எழுதினார்.

   

கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிள் முத்துச்சரம் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களுக்கு ஹாரிஸ்தான் வரிசையாக இசையமைத்தார். அதன் பின்னர் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ரஹ்மானிடம் சென்றார். அப்போது கௌதம் – ஹாரிஸ் கூட்டணி பிரிந்துவிட்டது, அவர்களுக்கு மனஸ்தாபம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

 

அதுபற்றி இப்போது ஒரு நேர்காணலில் கௌதம் பேசியுள்ளார். அதில் “நான் மின்னலே படத்தின் கதையை எழுதியபோதே அதில் ரஹ்மான்தான் இசையமைக்க வேண்டுமென உறுதியாக இருந்தேன். ஆனால் அப்போது என்னால் அவரை சந்திக்கக் கூட முடியவில்லை. அவர் அவ்வளவு பிஸியாக இருந்தார்.

நான் குமுதம் பத்திரிக்கைக்காக ஒரு விளம்பரப் படம் எடுத்தேன். அப்போது எனக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பழக்கமானார். அதன் மூலமாக தான் அவர் மின்னலே படத்தினுள் வந்தார். அவர் வசீகரா பாடலுக்கு இசையமைத்த போது நான் உணர்ந்து கொண்டேன் “இவர்தான் என்னுடைய இசையமைப்பாளர்” என்று. அப்படிதான் எங்கள் பயணம் தொடர்ந்தது” எனக் கூறியுள்ளார்.