உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்விலாஸ் என்ற அந்த முதியவரைச் சில நபர்கள் மரத்தில் கட்டி வைத்து, முகத்தில் கரியைப் பூசி, மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் போது அவரது தலை மீண்டும் மீண்டும் மரத்தில் மோதப்பட்டதோடு, அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் வாங்கிக்கொண்டு கிராமத்து இளைஞர்களும் இளம் பெண்களும் மொபைல் போனில் பேசுவதற்கும், வயல்வெளிகளில் சந்திப்பதற்கும் ராம்விலாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகச் சிலர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த கொடூரமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், முதியவர் ராம்விலாஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில், சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு முதியவரை சித்திரவதை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
