ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே” எனப் பேசியிருந்த தவெக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகவும் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சரின் இந்த விமர்சனம் அவரின் அரசியல் அறிவின்மையையும் முதிர்ச்சியற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமைச்சருக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ள நயினார் நாகேந்திரன், “ஆட்சியமைப்பதற்காகத் தொலைபேசியில் நீங்கள் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள்? என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா? எனவே, இனிமேலும் இதுபோன்ற மலிவான ‘அரசியல் ஸ்டண்ட்’-களைச் செய்ய வேண்டாம்” என மிகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படைகளைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பொறுப்பற்ற முறையில் பேசும் நிர்மல் குமார், சட்டத்துறை அமைச்சராக நீடிப்பதற்கே தகுதியற்றவர் என்றும் அவர் தனது கண்டனப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
