தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன். பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன்.
இளையராஜா போல சீரியஸான ஆளாக இல்லாமல் மிகவும் ஜாலியான ஆளாக இருப்பவர் கங்கை அமரன். அவரின் பாட்டுக் கச்சேரிகள் மற்றும் நேர்காணல்களைப் பார்த்தாலே இது தெரியும். அதே போல தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி இன்றைய இளம் கலைஞர்கள் வரை எல்லோருக்கும் அவர் மிகவும் நெருக்கமான நட்பில் இருப்பவர்.
அவரின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் முன்னணியில் இருப்பவர் எஸ் பி பாலசுப்ரமணியம். கங்கை அமரன் சினிமாவுக்கு அறிமுகமாகும் முன்பே அவரின் மெல்லிசைக் குழுவில் இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சி இப்போது யுடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் காணக்கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுஹாசன் சமீபத்தில் இதை நினைவுகூர்ந்து பேசும்போது அந்த எபிசோட் மாதிரி ஒரு ஜாலியான எபிசோட் அமையவே இல்லை எனக் கூறியுள்ளார்.
அதில் “அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பைப் போல நான் எங்கும் பார்த்ததேயில்லை. இருவருமே பயங்கரமான சேட்டைகள் எல்லாம் செய்து கொஞ்சி விளையாடிக் கொண்டார்கள். அன்று செட்டே மிகவும் சந்தோஷமாக உற்சாகமாக இருந்தது. திடீரென்று ஒருவர் கன்னத்தை மற்றொருவர் கிள்ளி முத்தம் கொடுத்தது போல செய்ததெல்லாம் யாருமே எதிர்பார்க்காதது. அந்த எபிசோட் மன நிறைவான ஒன்று’ எனக் கூறியுள்ளார்.