செல்போன் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் இன்றைக்குச் சிறுவர், சிறுமிகளிடையே அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அறிமுகமாகும் நபர்களின் போலி அன்பையும் போலியான உலகத்தையும் உண்மை என நம்பி, வளரிளம் பருவத்தினர் பலர் தங்களின் எதிர்காலத்தைச் சீரழித்துக் கொள்கின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கைகளில் கட்டுப்பாடின்றி செல்போன்களை ஒப்படைப்பதும், அவர்களின் ஆன்லைன் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தவறுவதும் இதுபோன்ற பல விபரீதங்களுக்கும் குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.
இன்ஸ்டாகிராமில் காதல் வலையில் வீழ்த்தி, சிறுமிகளைத் தனியாக வரவழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதும், அதை வீடியோவாக எடுத்து மிரட்டுவதும் அண்மைக்காலமாகத் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற அதிர்ச்சிச் சம்பவங்கள் குறித்து நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக விழிப்புணர்வுச் செய்திகள் வெளிவந்த போதிலும், சிறுமிகளிடம் ஏற்படும் விழிப்புணர்வின்மையால் இத்தகைய ஆபத்துகள் குறைந்தபாடில்லை. சமூக ஊடகங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளைப் புரிந்து கொள்ளாமல், முகம் தெரியாத நபர்களைப் பிளைண்ட் ஆக நம்புவது பேரபாயத்தில் கொண்டு போய் விடுகிறது.
இதற்குச் சான்றாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனைச் சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியபோது, அக்காதலன் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து அம்மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதை வீடியோவாக எடுத்து அச்சிறுமியை மிரட்டிய கொடூரமும் அரங்கேறியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. இச்சம்பவம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டில் கூடுதல் கவனத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்க உணர்த்துகிறது.
