“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர், நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பைபாஸ் பழவேலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அவர் வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட வெறிபிடித்த கும்பல் அவரை திடீரெனச் சுற்றி வளைத்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாள்களால் வீரமுத்துகிருஷ்ணனைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை வெட்டிக் கொன்று ஏரியில் புதைத்த வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்த நிலையில், அதற்குப் பழிதீர்க்கவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளிகள் பெட்ரோல் பங்க்கில் வைத்து இக்கொடூரத்தைச் அரங்கேற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்துச் செங்கல்பட்டு தாலுகா போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்மக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.