தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர் ராமதாஸின் மகள் காந்திமதி தனது சகோதரர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அண்ணி சவுமியா மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உண்மையான பாமக எது என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டுக்கே தெரியும் என்று சவால் விடுத்துள்ள அவர், கட்சியின் இன்றைய நிலைக்குக் குடும்ப உறுப்பினர்களின் அதிகார ஆசையே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
சவுமியா ராமதாஸை மிகக்கடுமையாகச் சாடிய காந்திமதி, “இந்தக் குடும்பம் பிரிவதற்கும் இவ்வளவு சிக்கல்களுக்கும் முழு முதற்காரணம் சவுமியாதான். ஒரு திருமணத்திற்குப் புடவை எடுக்கச் சென்றால் கூட மூன்று விதமான திட்டங்களைத் தீட்டும் அளவுக்கு அவர் தந்திரமானவர். எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற ஒற்றை ஆசைக்காகவே, பசுமைத் தாயகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சி என ஒவ்வொரு அமைப்பாகத் தன்வசப்படுத்திக் கொண்டனர். அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகப் போட்டு வந்த திட்டங்கள், என் முதுகிலேயே குத்தும் வரை எனக்கே தெரியவில்லை; அவர்களுடன் நெருக்கமாக இருந்த எனக்கே இந்தச் சதி தெரியாமல் போய்விட்டது” என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், தனது தந்தை டாக்டர் ராமதாஸ் குறித்து அன்புமணி பேசியவற்றையும் அவர் வெளிப்படுத்தினார். “அப்பா எப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்? வயதாகிவிட்டது கம்முனு இருக்க வேண்டியதுதானே” என்று அன்புமணி அடிக்கடி தன்னிடம் கேட்டதாகக் காந்திமதி தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களை ஓரம் கட்டிவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் இவர்களின் உண்மை முகத்தைத் தேர்தலுக்குப் பின் மக்கள் அறிவார்கள் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
