திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், “என்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றார்களோ, அன்றைக்கே திமுக கூட்டணியில் இருக்க முடியாது என வெளியில் வந்துவிட்டோம்” என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு அக்கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிமுக சார்பில் வெற்றி பெற்ற இரண்டு எம்.எல்.ஏ-க்களும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், அவர்களால் தவெக அமைச்சரவையில் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், திமுக கூட்டணியை உதறிவிட்டு தவெக அரசுக்கு மதிமுக தனது முழு ஆதரவை வழங்கி வருகிறது.
திமுக மற்றும் மதிமுக இடையே தற்போது வார்த்தைப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வைகோ மற்றும் துரை வைகோ ஆகிய இருவருமே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மதவாத அரசியலை எதிர்ப்பதற்காகவே அன்று திமுகவுடன் கைகோர்த்ததாகக் குறிப்பிட்டுள்ள துரை வைகோ, தவெக அரசு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதாகப் பேசியுள்ளார். இதன் காரணமாகவே தாங்கள் மட்டுமன்றி, பிற தோழமைக் கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் விளக்கியுள்ளார். மேலும், தற்போதைய விஜய் அரசு லஞ்சமற்ற ஒரு சிறந்த ஆட்சி மாற்றத்தை தமிழக மக்களுக்குக் கொடுப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
புதிய அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களைத் தொடர்வதும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் தவெக அரசுக்கு மிக சவாலான காரியமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். குறிப்பாக, கடுமையான நிதிப் பற்றாக்குறை புதிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், இதனை நிவர்த்தி செய்வதற்குத் தவெக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசுத் துறைகளில் நிலவும் நிதி கசிவுகளை முழுமையாகக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது நிதி நிலைமையைச் சீராக்க உதவும் என்றும் துரை வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
